பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

Thursday, April 29, 2010

நாம் பயங்கரவாதிகளா???




தமிழர்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவோர் மனச்சாட்சியுடன் எம்முன்னால் வரட்டும்!!!

தமிழர்களின் 60 ஆண்டுகால போராட்டம் பல பரிமாணங்களைச் சந்தித்து, இன்று அது வித்தியாசமான ஒரு பரிமாண நிலையில் வந்து நிற்கின்றது. முதல் 30 வருடகால அகிம்சைவழிப் போராட்டங்களோடு தொடர்ந்த தமிழர்களின் போராட்டம் பயனற்றுப்போக பொறுமையிழந்த நிலையில் அடுத்தகட்டமாக ஆயுதப்போராட்டம் உருப்பெற்றது.உலகமே வியக்கும் வகையில் எழுச்சிபெற்ற தமிழர்களின் ஆயுதப் போராட்டம் புலிகளின் தலைமையில் கடந்த வருடம் 2009 மே 18 வரை தொடர்ந்தது.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் "பயங்கரவாதம்" என்ற போர்வையில் சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் கூடிய மேற்பார்வையில் சிதைக்கப்பட்டது. இதனால், கண்முன்னே தெரிந்த தமிழர்களின் தேசவிடுதலை இன்று கேள்விக்குறியாக கண்ணுக்கெட்டாத தொலைவில் எங்கேயோபோய் நிற்கின்றது.
இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்த்தியாகங்கள், பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் விலைமதிப்பில்லாத உன்னத உயிர்க்கொடைகள் அனைத்தையும் "பயங்கரவாதம்" என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடக்கி, கேவலப்படுத்தி சிதைத்து நிற்கின்றது சர்வதேசம். சிங்கள வல்லாதிக்கம் தமிழர்களின் எதிரி. அது எப்பொழுதுமே எம்மை எதிரியாகவே பார்க்கும். அது தமிழர்களை பயங்கரவாதி எனும்... தீவிரவாதி எனும்... அதற்கு மேலேயும் சொல்லும். கொல்பவனுக்கு சொல்வதெல்லாம் சாதாரணம்!!! ஆனால் சர்வதேசம் எமக்கு செய்தது அநீதியிலும் அநீதி. இன்னமும் தமிழர் விடயத்தில் அதையே செய்துகொண்டிருக்கின்றது.
நடுநிலை, மனிதநேயம், மனித உரிமைகள் என வார்த்தைக்கு வார்த்தை தவறாமல் உச்சரிக்கும் சர்வதேசத் தலைவர்களும், மனித உரிமைகளைக் கட்டிக்காக்க வேண்டிய ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்பாளர்களும் ஈழத் தமிழர்களின் அவலங்களை மட்டும் கண்டுகொள்ளாமல் தவறவிட்டதேன்???

விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்களின் தலைமையில் நடக்கும் தமிழர்களின் போராட்டமும் பயங்கரவாதம். இது.... சிங்களதேசம் ஓதிய மந்திரம். ஆனால் அவர்களே மறந்தாலும் சர்வதேசம் அதை தாரகமந்திரமாக வரித்துக் கொண்டது. 2002 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடான சமாதான காலத்தில் இலங்கையில் புலிகளுக்கான தடை அகற்றப்பட்டிருந்த போதிலும், சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த புலிகள் அமைப்பு மீது பல சர்வதேச நாடுகளில் புதிதாக தடைகள் விதிக்கப்பட்டன என்பது இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

தமிழர்கள் சர்வதேசத்திற்கு என்னதான் பாவம் செய்தார்கள்? ஏன் இவ்வாறு தமிழர்களை சர்வதேசம் தண்டிக்கவேண்டும்?? தமிழர்களை தண்டிக்க சர்வதேசத்திற்கு அருகதை இருக்கின்றதா???

உலகெங்கும் வாழும் தமிழர்களே!
ஒன்றைமட்டும் நன்கு விளங்கிக் கொள்ளுங்கள்! "தமிழனுக்கென்று இன்று ஒரு தேசம் இல்லை" என ஏங்குகின்றீர்களே!? இந்த இழிநிலையை உருவாக்கியதே இந்த சர்வதேசந்தான்! வரலாற்றின் முன் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், வெள்ளையர்களின் ஆட்சிக் காலத்திற்கு முன் இலங்கையில் தமிழ் இராச்சியம், சிங்கள இராச்சியம் என தனித்தனியான தேசங்களே இருந்துள்ளன. அன்று தமிழர்களுக்கான தனியான தேசம் என இருந்துள்ளது.அதற்கு வரலாற்று ரீதியிலான ஆதாரங்களும் உள்ளன. இதே நிலைதான் இந்தியாவிலும். சோழ நாடு, பாண்டிய நாடு என தமிழருக்கான தனித்தனியான நாடுகள் இருந்துள்ளன. ஆனால், வெள்ளையர்களின் வருகைக்கு பின்னர்... குறிப்பாக பிரித்தானியரின் ஆட்சியில் தமது நிர்வாக இலகுத்தன்மைக்காக அனைத்துப் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே நாடாக உருவாக்கப்பட்டன. தனித்தேசத்தில் தமது சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களின் சுதந்திர வாழ்வுரிமைக்கான அத்தியாயம் அத்தோடு நிறைவுக்கு வந்தது.

இறுதியில், சுதந்திரம் கொடுக்கின்றோம் என்று சொல்லிக்கொண்டு சென்றவர்கள் தமிழர்களின் சுதந்திரத்தினை மட்டும் பறித்துவிட்டுச் சென்றனர்.அன்று வெள்ளைக்காரப் பாட்டன்மார்கள் சொல்லிவிட்டு, செய்துவிட்டுப் போனதை இன்று சர்வதேசத்தில் நீதியினை நிலைநாட்ட முனைவதாய் காட்டிக்கொள்ளும் வெள்ளைக்காரப் பேரன்மார்களும் பின்பற்றி... அதையே தொடர முனைகின்றார்கள். வரலாற்று ரீதியிலான இந்தக் காரணங்களோடு தற்போதைய பிராந்திய வல்லாதிக்கம்,பொருளாதாரப் போட்டிகளும் முண்டியடித்து ஒட்டிக்கொண்டன. இவர்களின் சுயநலன்களுக்கு தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்களின் வாழ்வுரிமை, சுதந்திரம் என்பவை பறிபோயுள்ளது.

உண்மையிலே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு மூலகாரணமே சர்வதேசம் தான். இவர்கள் தமிழர்கள் விடயத்தில் இழைத்த தவறினை இவர்களேதான் திருத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெள்ளை இனத்தவர்களை உள்ளடக்கிய சர்வதேச தலைவர்களுக்கு தமிழர்களுக்கான நீதியினை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் இருக்கின்றது. ஆனால் இவர்களோ தமிழர்களின் நீதியான விடுதலைப் போராட்டத்திற்கு பயங்கரவாதச் சாயம் பூசுவதிலேயே குறியாய் இருக்கின்றார்கள்.
நாம் மாற்றான் மண்ணில் பங்கு கேட்கவில்லை! நாம் காலங்காலமாக வாழ்ந்து வந்த நமது பூர்வீக நிலத்தினையே நாம் கேட்கின்றோம்? எமது சுதந்திரமான வாழ்வுரிமையையே எதிர்பார்க்கின்றோம்! எமது தேவையெல்லாம் எமது சொந்த மண்ணில் அமைதியான சுதந்திரமான வாழ்க்கை என்பதுதான். அதைக் கொடுப்பதில் சிங்களவரைவிட இவர்களுக்கு அப்படியென்ன கஷ்டம்?

எமது சுதந்திரத்துக்காக நாம் இழந்தவை மிகமிக அதிகம். இன்றும் இழந்துகொண்டே இருக்கின்றோம். எமது நியாயமான விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதம் என்று சொல்லும் சர்வதேசமே! உனக்கு மனச்சாட்சி என்று ஒன்றிருந்தால், எம்முன்னே வா! ஒரு நாளைக்கு மட்டும் தமிழனாய் வாழ்ந்துபார்! எமது வலிகளை ஒரேயொருநாள் மட்டும் அனுபவித்துப் பார்! அப்போது தெரியும்! அதன்பின் நீயே சொல்!... நாம் பயங்கரவாதிகளா என்று...?!

எத்தனை தியாகங்கள்! எத்தனை உயிர்க்கொடைகள்! எத்தனை இழப்புக்கள்! எத்தனை வலிகள்! எத்தனை வீரம்! வெற்றியிலும் தோல்வியிலும் நழுவாத போர்நெறி! எதிரியும் பாராட்டும் ஒழுக்கம்! எத்தனை தன்னம்பிக்கை! எத்தனை கோடி மக்களின் நம்பிக்கை! அத்தனையும் வீணானதே....! ஏன்....?

"பயங்கரவாதம்" என்று சொல்லிச் சொல்லியே எம்மை பயங்கரமாய் அழித்தீர்கள்!
ஒட்டுமொத்தமாய் அழிக்க சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து வந்தீர்கள்!
அன்று நாம் அழிக்கப்பட்டோம்! ஒட்டுமொத்த உலகத்தாலும் ஒதுக்கப்பட்டு சிதைக்கப்பட்டோம்!!
தமது சுதந்திர வாழ்வுக்கான விடுதலைக்காக வேற்றுவழியின்றி ஆயுத மேந்தியது பயங்கரவாதம் என சொல்லிச் சொல்லி ஒட்டுமொத்த இனத்தையுமே சிதைத்தீர்கள்.

அன்று களத்தில் எம்மை சிதைத்தீர்கள்... இன்று நீங்களே எம்மை உங்கள் மடியில் விதைத்திருக்கின்றீர்கள். பெரு விருட்சமாய் மீண்டும் எழுவோம்! உலகமே திரண்டாலும் நம் விடுதலை உணர்வை அடக்கமுடியாது. இப்போது நீங்கள் எம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லமுடியாது. உங்கள் கைகளில் உள்ள ஜனநாயக ஆயுதத்தினையே நாங்களும் இப்போது தாங்கி நிற்கின்றோம். அகிம்சை வழி நின்றோம்... பலனில்லை. மறவழி நின்றோம் ... கூடிவந்து சிதைத்தீர்கள். இப்பொழுது உங்கள் வழியில் நீங்கள் குறை கண்டுபிடிக்கமுடியாத அறவழியில் ஜனநாயக நெறியில் நாம் நின்று நம் உரிமையைக் கேட்கின்றோம். இப்பொழுது சர்வதேசம் பதில் சொல்லியே ஆகவேண்டும். எம்மை பயங்கரவாதிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. தமிழர்களுக்கு நீதியான பதில் சொல்லாமல் ஒதுங்கவும் முடியாது!

தமிழ் மக்களே! நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் வரும் மே மாதம் 2ஆம் திகதி நடந்தேற இருக்கின்றது. இவ்வாறான கட்டமைப்பென்பது நமக்கு நிச்சயம் அவசியமானது. கருத்துக் கொள்கை வேறுபாடுகள் பல இருந்தாலும் அவற்றினைத் திருத்தி தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்திற்காக பயணிக்க வேண்டியது தமிழர்களாகிய நம் அனைவரினதும் வரலாற்றுக் கடமை என்பது மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் கூட. இதனை விமர்ச்சிப்பவர்களுக்கு சின்னச் சின்னதாய் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதனை ஆதரிப்பவர்களுக்கு நம் மாவீரர்கள் சுமந்த "தமிழீழ விடுதலை" என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே போதும். நமது மண்ணில் நிர்மாணிக்கப்பட்ட தமிழீழ அரசு இன்று சிதைக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் புலத்தில் நாம் அமைக்கப்போகும் தமிழீழ அரசினை சிதையவிடாமல் ஒற்றுமையோடு காப்போமானால் இது கடல் கடந்து தாயகமண் திரும்பி தமிழீழ தனியரசினை உருவாக்கும் என்பது நிச்சயம்!

எனவே, வருகின்ற மே 2 இல் நடக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் அனைத்துத் தமிழர்களும் சேர்ந்து செயற்திறன்மிக்க, என்றுமே தமிழருக்காகவும் தாயக மண்ணுக்காகவும் பாடுபடக்கூடிய தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்போம்! நாம் தற்போது தேர்ந்தெடுத்திருக்கும் அறவழியில் தொடர்ந்து போராடி நம் உரிமைகளை வென்றெடுப்போம்!

நாம் பயங்கரவாதிகளா???
தமிழர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவோரே! எம்முன்னே வாருங்கள்!!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

-பருத்தியன்-

Friday, March 19, 2010

ஈழத் தமிழினத்தின் எதிர்காலத்தினை தீர்மானிக்கப்போவது யார்?




நமது இனம் திட்டமிடப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது... சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரியும், துரோகிகளும் தான் அதை செய்கின்றார்கள் என்றிருந்தால், இன்றோ... அதை நாமே செய்துகொண்டிருக்கின்றோம். தமிழரின் தலைமைத்துவம் ஒற்றைக் கேள்விக்குறிக்குள்ளேயே அடங்கிவிட்டிருக்கின்றது. ஈழ தேசத்தின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலோடு முற்றுப் பெறவில்லை என்பதனை தற்போதைய சர்வதேச நிகழ்வுகள் எடுத்தியம்பும் நிலையில், புலிகளின் பின் நாம்தான் தமிழருக்கான பிரதிநிதிகள் என்று முளைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல கூறமைப்பாய் சிதறி நிற்கின்றது. ஒன்றுபட்டு குரலெழுப்பி தமிழரின் உரிமையைக் காக்க வேண்டியவர்கள் இன்று கூறுபட்டுக் குழப்பி நிற்பது வேதனைக்குரியது.

இங்கு யார் பிரிந்தார்கள்; பிரிக்கப்பட்டார்கள் என்பவற்றின் காரண காரியங்களை இரண்டாம் பட்சமாக வைத்து, இவ்வளவு காலமாய் நம் மக்கள் பட்ட துன்பங்கள்,கஷ்டங்கள்,இழப்புக்கள் எல்லாம் எதற்காக??? என்ற கேள்வியை முதன்மையாக வைப்போம்.

சிங்களவன் போடும் பிச்சைத் தீர்வை வாங்கிக் கொள்வதற்கு இவ்வளவு போராடியிருக்கத் தேவையில்லை. இவ்வளவு அவலங்களை சந்தித்திருக்க வேண்டியதில்லை. ஆனால், போகிற போக்கில் இவர்களின் ஒற்றுமையில்லாத செயற்பாடுகளினூடாக சிங்களவன் போட நினைக்கும் பிச்சைத் தீர்வைவிட கேவலமான ஒரு தீர்வுதான் தமிழருக்குக் கிடைக்கும் போலிருக்கின்றது. அப்போது இவர்கள் ஏதாவது சொல்வதற்கும், செய்வதற்கும் ஒன்றுமே இருக்காது. எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்களாய் நிற்பார்கள். இவர்களோடு துணைநின்ற துணைக்கண்டம் கூட துணை நிற்காது. மேற்குலகமும் வேடிக்கை பார்த்து நிற்க தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படும். தமிழர்களின் பிரதிநிதிகளாய் சிங்களம் சொல்லும் எதனையும் ஆமோதிக்கும் தமிழ்த் தலைவர்கள் மாத்திரம் விருந்தினர்களாய் வந்து உட்கார அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழர்களின் எதிர்காலம் நமது அரசியல் சாணக்கியர்கள் முன்னாலேயே சிங்களவன் கைகளிற்கு எழுதிக் கொடுக்கப்படும்.

நம் மக்கள் செய்த தியாகங்கள் எல்லாம் மண்ணாய்ப் போகும்! மண்ணோடு மண்ணாகிப் போன நம் மாவீரர் கனவுகள் எல்லாம் வீணாய்ப் போகும்! தமிழீழம் என்கின்ற தேசத்தின் விடியல் தொலைவாகி தமிழினத்தின் விடுதலையும் கனவாகிப் போகும்!

பாராளுமன்றத் தேர்தலுக்காக போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் தற்போது மும்முரமாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் மிகவும் வினோதமாய் அமைந்துள்ளன. வழமையாக ஒரு தேர்தல் வரும்போது கட்சிகள் சில ஒற்றுமையாகி கூட்டணி வைத்து தம்மை பலப்படுத்திக் கொள்ளவே முயலும். ஆனால் தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவடைந்து மூன்று அணிகளாக உருவாகியிருப்பதானது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். தாயகத்திலுள்ள தமிழர்களினைப் பொறுத்தவரையில் தற்பொழுது சிங்கள தேசத்தினால் நிர்ணயிக்கப்படும் தேர்தல்களில் அதிக நாட்டமில்லாதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.வாக்களிக்க ஆர்வமுள்ள அற்ப சொற்ப வீதமானவர்களைக் கூட தமது அச்சுறுத்தல்களினால் அடக்கிவிடுகின்றது சிங்கள வல்லாதிக்கம். அதைத்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது காணமுடிந்தது. நிலைமை இப்படியிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவென்பது தமிழர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தினையும் விரக்தி நிலையையுமே உருவாக்கியிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் சிதறடிக்கப்படுவது உறுதி என்ற மகிழ்ச்சியான செய்தியை மகிந்தவுக்கு முன்கூட்டியே அறிவித்திருக்கின்றார்கள் நம் தமிழ் அரசியல் சாணக்கியர்கள்.

ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் தமிழீழம் என்ற இலட்சியக் கனவினை அடிமனதில் சுமந்தபடியே வாழ்கின்றான் என்பதனை இந்த அரசியல்வாதிகள் கட்டாயம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கோட்பாட்டினைக் கைவிட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். தற்போழுதும், எப்பொழுதும் உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் இருப்பவர்களை இனங்கண்டு வாக்களிப்பதன் மூலமே தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த முடியுமென்பதுடன், தாயகத்தில் வாழும் தமிழர்களின் அபிலாசையும், கோரிக்கையும் தமிழீழத் தேசியமே என்பதனை சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்தவும் முடியும்.

ஒரு பேரழிவின் பின்னும் ஒன்றுபடாத இனமாக தமிழினம் இருப்பது சகிக்க முடியாத வலியை மட்டுமே கொடுக்கின்றது. தாயக நிலைமை இவ்வாறிருக்க, புலம்பெயர் தேசங்களில் தொடரப்படும் ஜனநாயக வழிப் போராட்டங்களில் கூட பிளவுபட்ட நிலையே காணப்படுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசு, உலகத் தமிழர் பேரவை, வட்டுக் கோட்டைத் தீர்மானம் என பல வழிகளில் தொடரப்படும் போராட்டங்களின் நோக்கங்கள் , கொள்கைகள் தாயக விடுதலையையே முன்னிலைப்படுத்துவதாய் அமைந்தாலும், இவ்வமைப்புக்களுக்கிடையில் ஆரோக்கியமான ஒருங்கிணைந்த புரிந்துணர்வும், ஒத்துழைப்பும் இல்லையென்பதும் தெரிகின்றது. இந்த நிலை மாற்றப்பட்டு தாயக விடுதலை என்ற இலட்சியத்தினை நோக்கி சமாந்தரமாகப் பயணிக்கும் முப்படையணிகளாக எதிர்காலத்தில் தமது ஜனநாயக வழி போராட்டங்களினை ஒற்றுமையாக முன்னெடுக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழர்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாக உள்ளது. அத்தோடு, இவற்றின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் தமது முழு ஆதரவினைத் தெரிவித்து தாயக விடுதலைக்காக உழைக்க வேண்டியது அனைத்து புலம்பெயர் தமிழர்களினது கடமையாகவும் அமைகின்றது.

ஒரு இனத்தின் எதிர்காலத்தினை அந்த இனமே தீர்மானிக்கவேண்டும். அதை வேறொருவர் தீர்மானிக்க எந்த விதத்திலும் அனுமதிக்கக் கூடாது.

எமது இனத்தின் எதிர்காலமும் விடுதலையும் எமது விடுதலை உணர்விலேயே தங்கியுள்ளன.
இந்த உண்மைகளை நன்கு புரிந்து கொண்டவர்களாய், வரவிருக்கும் காலங்களில் தமிழ்த் தேசியக் கோரிக்கையினை வெளிப்படுத்துவோம்!
தமிழீழம் ஒன்றுதான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வு என்பதை சர்வதேசத்திற்கு தெரிவிப்போம்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

-பருத்தியன்-

Saturday, January 23, 2010

ஜனாதிபதித் தேர்தலின் பின் தமிழரின் போராட்டத்திற்கு முடிவுகட்ட முனையும் சிங்களமும் சர்வதேசமும்



இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.

இன்னும் சில நாட்களில் நடந்தேறப்போகும் தேர்தலில் வெற்றி யாருக்கு என தீர்மானிப்பதில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளே பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றன. அத்தோடு மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் இவ்விடயத்தில் அடங்கும்.

தமிழர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பொன்சேகாதான் வெல்லவேண்டும் என்பதற்காக இல்லாமல் எப்படியாவது மகிந்தவை தோற்கடித்துவிட வேண்டுமென்ற காட்டமான எண்ணமாகவே பொன்சேகாவுக்கான இவர்களின் ஆதரவு அமையும் என்பதே உண்மை.

இது இவ்வாறிருக்க, தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும்... அதில் யார் வெற்றி பெற்றாலும்... அதன் பின் தமிழர்களின் பிரச்சனை தொடர்பான விடயங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். மகிந்த மீண்டும் ஜனாதிபதியானாலும், சரத்பொன்சேகா புதிதாக ஆட்சிபீடம் ஏறினாலும் அவர்களினதும் அவர்களின் பின்னாலுள்ள சர்வதேச சக்திகளினதும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படியே தமிழர் பிரச்சினை கையாளப்பட இருக்கின்றது. இது எந்தளவுக்கு தமிழருக்கு சார்பானதாகவும் நியாயமானதுமாகவும் அமையுமென்பது மிகவும் சந்தேகத்துக்குரியதே.

தமிழர்களின் பேரம்பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கமும், ஆயுதப் போராட்டமும் (தற்காலிகமாக) இல்லையென்று ஆனநிலையில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள வல்லாதிக்கம் இணங்கப் போவதில்லை. தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராடிய தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறைமையிலான சுயாட்சி தீர்வைத்தன்னும் கொடுப்பதற்கு சிங்கள இனவாதம் உடன்படாது.

தமிழர்களின் வாக்குகளிலேயே தமது வெற்றி தங்கியுள்ளது என்று தெரிந்திருந்தும், தாம் ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அவ்வாறான சமஷ்டி முறை சுயாட்சி தீர்வொன்றை அளிப்பதாக "பொய்க்கேனும்" ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு துணியவில்லையென்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். சிங்கள தேசத்திடமிருந்து தமிழருக்கான நியாயமான தீர்வு எப்பொழுதுமே கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கு பட்டறிந்துள்ளார்கள். இருப்பினும், சர்வதேச ஆதரவுகளினைத் திரட்டி அதன்மூலம் தமக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற தளராத நம்பிக்கையுடன் தமிழினம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.

ஆனால், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ள இந்த கால இடைவெளியினை தகுந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் திரைமறை வேலைகளில் சர்வதேசம் ஈடுபட ஆரம்பித்துள்ளது. சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில், தமது வல்லாதிக்க சுயநலன்களுக்கு ஏற்றவாறாக தமக்கு எப்பொழுதுமே சாதகமாக இருக்கக் கூடியவாறான ஒரு ஆட்சி இலங்கை தேசத்தில் அமைந்தால் போதுமானது என்ற சுயநல நோக்கத்துடனேயே செயற்படுகின்றது. தமிழர்களின் அபிலாசைகள், நியாயமான தீர்வு, சுதந்திரமான வாழ்க்கை என்பதெல்லாம் சர்வதேச நாடுகளினைப் பொறுத்தவரையில் இரண்டாம்பட்சம்தான். தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து இலங்கை அரசின்மீது தமது அழுத்தங்களினை பல்வேறு வழிகளில் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது சர்வதேசம். அவை தமிழர்மீதான அக்கறையினால்தான் என்று நாம் நினைத்தோமானால், அது எமது அறிவீனம்தான்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைகளினைப் பொறுத்தவரையில் மகிந்தவை விட சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதியானால் தமக்கு சாதகமாக இருப்பார் என்று கருதுகின்றன. சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட விடயத்தில் கூட பல சர்வதேச நாடுகளின் மறைமுக தொடர்புகள் இருப்பதாகவே கருதப்படுகின்றது. மறுபக்கத்தில் மகிந்தவுக்கு பின்புலமாக சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் என இன்னொரு சர்வதேசக் கூட்டணி துணை நிற்கின்றது. இவ்வாறு தற்போதைய இலங்கை அரசியலில் சர்வதேச பின்னணி செயற்பாடுகள் தொடர்கின்றன.

தேர்தலின் பின் ஆட்சிபீடமேறும் ஜனாதிபதிக்கு பிரதான கடமையாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதென்பதே அமையப் போகின்றது. ஆனால், ஜனாதிபதியே விரும்பினாலும் தமிழருக்கு நியாயமான தீர்வினை கொடுப்பதற்கு சிங்கள இனவாதிகள் இடங்கொடுக்கமாட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, தமிழர்களிற்கான தீர்வு என்ற பெயரில் உருப்படியில்லாத தீர்வொன்றினை முன்வைத்து அதன் மூலம் தமிழர்களினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் உத்வேகத்தினை குறைத்து காலப்போக்கில் விடுதலை உணர்வினையே இல்லாமற்செய்துவிடும் சாமர்த்தியத்தனமான திட்டமே வகுக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர்களுக்கு இதைவிட சிறந்த தீர்வு வேறொன்றுமில்லை என்று பாராட்டுத் தெரிவித்து அதை அங்கீகரிப்பதற்கு சிங்களத்தின் பின்னால் நிற்கும் சர்வதேச நாடுகளும் தயாராகிவருகின்றன. பெரும் இழப்புக்களைச் சந்தித்து நொடிந்து போய் சுதந்திரத்தினை,உரிமைகளை இழந்து இன்றும் அகதிகளாய் அலையும் அவலத்துடன் அல்லாடும் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை கூட்டுச்சேர்ந்து அழித்தது மட்டுமல்லாமல் இப்போது அவர்களின் சுயநலன்களுக்காக தமிழர் தீர்வு விடயத்திலும் பெரும் வரலாற்றுத் தவறினை இழைப்பதற்கு சர்வதேசம் தயாராகி நிற்பது நியாயமானதா? நீதியானதா??

தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை புரிந்துகொண்டு அவர்களுக்கான தீர்வினை முன்வைப்பதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அதையும் மீறி தமிழர்களை ஏமாற்றி அவர்களின் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காக சுயநலப்போக்குடன் சிங்களத்துடன் கைகோர்க்குமானால், அது சர்வதேசம் இழைக்கும் வரலாற்றுத் தவறாகவே அமையும் என்பதோடு மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்தின்மேல் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுப்பதாயும் அமைந்துவிடும்.

சர்வதேசத்தின் நீதியினை எதிர்பார்த்திருக்கும் தமிழர்களுக்கு சர்வதேசமும் சிங்களமும் சேர்ந்து இவ்வாறான துரோகத்தினை இழைப்பதற்கு உலகம் பூராவுமுள்ள உலகத்தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர் தமிழர்களோடு தமிழகத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என உலகம் பூராவும் பரவி வாழும் அனைத்துத் தமிழர்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து தமிழருக்கான நீதிக்காக குரல் கொடுக்கவேண்டிய தருணமிது. ஜாதி, மத, கட்சி என இன்னபிற வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் அணிதிரள்வோம்!


"நாம் தமிழர்" என்ற ஒரே கோட்பாட்டுடன் அனைத்துத் தமிழரும் ஒன்றிணைந்து குரல்கொடுப்போமானால் இந்த உலகம் அதற்கு பணிந்துதான் ஆக வேண்டும். அந்த நிலையை உருவாக்குவோம்! தமிழீழம் தன்னை எமதாக்குவோம்!! தமிழருக்கான நீதியை நிலை நாட்டுவோம்!!!

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"


-பருத்தியன்-

Tuesday, December 15, 2009

தமிழீழம்தான் தமிழருக்கான தீர்வு



எமது தலைவிதியை நாமேதான் தீர்மானிக்க வேண்டும் ! அதை எதிரிகளோ, துரோகிகளோ, சந்தர்ப்பவாதிகளோ தீர்மானிக்கக் கூடாது !


சுயநலமிக்க உலக நடைமுறைக்குள் எமது இனத்தின் விடுதலை முடக்கப்பட்டிருக்கின்ற இன்றைய நிலைமையில், அதிலிருந்து உடனடியாக மீளவேண்டிய கட்டாயம் எமக்கு இருக்கின்றது. உலக வரலாற்றில் எந்தவொரு தேசத்தின் விடுதலையும் மிக இலகுவாக கிடைத்ததாக சரித்திரம் இல்லை. அனைத்து விடுதலைப் போராட்டங்களும் பல தியாகங்களையும், சோதனைகளையும், சவால்களையும் தாண்டியே வெற்றி பெற்றன. சவால்களையும், சோதனைகளையும் தாண்டமுடியாத பல விடுதலைப்போராட்டங்கள் தோற்றுப்போன வரலாறுகளும் உண்டு.


இதுவரை நமது தமிழீழ விடுதலைக்காக நாம் இழந்தவை அதிகம். விடுதலைப் போராட்டத்தில் இழப்புக்கள் பன்மடங்கு வரலாம். ஆனால், இறுதிவரை நம் விடுதலை உணர்வினைமட்டும் சிறிதளவேனும் இழக்கக் கூடாது. சவால்களை எதிர்கொண்டு, இழப்புக்களையும் வலிகளையும் தாங்கி விடுதலை அடையும்வரை போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு தளராத மனவுறுதியுடன் இறுதிவரை போராடினால்தான் விடுதலையென்ற இனிய விடியலை நாம் காணமுடியும்.


இலங்கை சுதந்திரம் பெற்றதன் பிற்பாடு, சிங்களவர்களால் தமிழர்கள் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டு, பின்னர் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்தொழித்து இலங்கையை தனிச்சிங்கள நாடாக ஆக்குவதற்கு முனைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கெதிரான தமிழர்களின் அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில்தான் "ஆயுதப்போராட்டம்" என்பது முனைப்புப்பெற்றது. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் தலைமையிலான இந்திய அரசும் தனது ஆதரவினைக் கொடுத்திருந்தது.ஆனால் துரதிஷ்டவசமாக அவரது மறைவின் பிற்பாடு காலப்போக்கில் இந்தியாவின் ஆதரவு என்பதும் தமிழரிடமிருந்து கைநழுவிப்போனது. தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கென இருந்த ஒரேயொரு சர்வதேச ஆதரவும் அற்றுப்போய்விட்ட நிலையில் தமிழர்கள் தனித்துநின்றே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அன்றிலிருந்து இன்றுவரைக்கும் எந்தவொரு சர்வதேச நாடும் தமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. மாறாக, சிங்கள அரசிற்கு தமது முழு ஆதரவினையும் வழங்கி தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கவே முற்பட்டன. சுயநலமிக்க சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளினால் தமிழரின் போராட்டத்திற்கு ஏற்படுத்தப்பட்ட சவால்கள் சிங்களத்தினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களையும் விஞ்சின. சர்வதேச நாடுகளின் இரட்டைவேடம், துரோகத்தனங்களினால்தான் இன்று எமது போராட்டம் பெரும் பின்னடைவைச் சந்தித்து நிற்கின்றது.


முழு உலகமுமே கைகட்டி வேடிக்கை பார்த்துநிற்க, தமிழர்கள் அநியாயமாக கொன்றொழிக்கப்பட்டார்கள். மனிதநேயம், மனித உரிமைகள் என வாய்கிழியப் பேசும் ஐ.நா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும், உலக நாடுகளும் சிங்கள அரசின் அப்பாவித் தமிழர்கள் மீதான கொலைவெறியாட்டத்தினை தடுத்துநிறுத்தாமல், தமது மறைமுக ஆதரவினையே கொடுத்திருந்தார்கள். குறிப்பாக முள்ளிவாய்க்கால் சம்பவம், அதாவது ஒரு பேரழிவு நடந்தேறப்போகின்றது என்பதனை முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதை தடுத்துநிறுத்தவோ அல்லது அப்பாவி மக்களைக் காப்பாற்றவோ எந்தவொரு நாடும் முயற்சிக்கவில்லை என்பது கவலைக்குரியது. ஓயாத அலைகள்-03 நடவடிக்கை மூலம் புலிகள் ஆனையிறவினைக் கைப்பற்றிய பின்னர் யாழ் நகரின் நுழைவாயிலினை எட்டிநின்று யாழ்குடாநாட்டில் இருந்த முப்பதினாயிரம் படையினரையும் முற்றுகையிட்டிருந்தபோது அப்படையினரினைக் காப்பாற்ற பாய்ந்தடித்து உதவ முன்வந்த இந்தியா இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் மிகப்பெரிய பேரழிவு ஆபத்துக்குள் சிக்கியிருந்தபோது அவர்களைக் காப்பாற்ற பெயரளவுக்கேனும் முயற்சிக்கவில்லை. அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கைவிரித்து நிற்க அவர்களின் மெளனம் சிங்கள அரசிற்கு சம்மதத்தினை தெரிவிக்க நடந்தேறியதுதான் வன்னி அவலம். அதன்பின் அப்போர்க்குற்றங்களை மூடிமறைக்கவும், சிங்கள அரசினைக் காப்பாற்றவும் அதன் பங்காளிகளாய் இப்பொழுதும் அயராது முயற்சிக்கின்றனர். அது அவர்களின் சுயநலன்களுக்கானதாகவே அமைந்தாலும் உலக நீதியின் மீதுள்ள நம்பகத்தன்மையை கேள்விக்குரியதாக்கி இருக்கின்றது. அண்மையில் அமெரிக்காவின் செனட் சபையினால் வெளியிடப்பட்ட கொள்கையறிக்கையும் இதனையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான செயற்பாடுகளால் ஈழத்தமிழர்கள் விடயத்தில் சர்வதேசம் இழைத்த தவறினை, உலக நீதியின்மேல் ஏற்பட்டுள்ள சந்தேகத்தன்மையினை, "தமிழர்கள் மீதான இலங்கையின் இன அழிப்பு : அனைத்துலக சட்டங்களின்கீழ் தமிழர்களின் உரிமைகளைக் காப்பதில் அனைத்துலகத் தோல்வி" ( The Tamil Genocide by Srilanka : The Global failure to Protect Tamil Rights Under International Law ) என்ற தனது நூலின் மூலம் அனைத்துலக சட்டவல்லுநரும் பேராசிரியருமான பிரான்சிஸ்..போய்ல் ( Francis .A. Boyle ) அவர்கள் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றார்.


இன்றுள்ள உலக நடைமுறைப்படி அனைத்து நாடுகளுமே தம் நாடு சார்ந்த சுயநலக் கொள்கைகளுடனேயே செயற்படுகின்ற. இவ்வாறிருக்கையில், ஈழத்தமிழர்களின் விடயத்தில் சர்வதேசம், தமிழருக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நியாயமாக செயற்படுமென்பது கேள்விக்குரியதாகவே இருக்கும்.


தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக, பலமாக இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு பெரும் பின்னடைவினைச் சந்தித்து அவர்களின் செயற்பாடுகள் முற்றுமுழுவதுமாக இல்லாமற்போய்விட்டதாக சொல்லப்படும் இன்றைய நிலைமையில், தமிழருக்கான நிரந்தரத்தீர்வு என்ற பெயரில் தீர்வில்லாத மிக மட்டமான தீர்வினை முன்வைத்து அதன்மூலம் தமிழர்களை திருப்திப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.


அந்த மட்டமான தீர்வினை வாய் நிறைய புன்னகை தவழ இரு கையேந்தி வாங்கிக்கொண்டு "தமிழருக்கான தீர்வு கிடைத்துவிட்டது" என உலகம் முழுதும் தம்பட்டமடிக்க தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்ற பெயரில் ஒரு தரப்பினர் சிங்கள அரசினாலும், இந்தியா மற்றும் சில நாடுகளாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டு வருகிறார்கள். அதில் துரோகிகளும், விலைபோனவர்களும், சந்தர்ப்பவாதிகளும்தான் அடங்கியிருப்பார்கள் என்பது வெளிப்படையாகவே ஊகித்துக் கொள்ளக்கூடிய விடயம்.


இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிங்களத்தின் இராணுவவெற்றி பங்குபோடப்பட்டு அதன் பங்காளிகளாக தமிழின அழிப்பின் நாயகர்கள் மஹிந்தவும், சரத் பொன்சேகாவும் தேர்தல் களத்தில் எதிரெதிராக நிற்பது தென்னிலங்கையில் சுவாரஷ்யமான அரசியல் நிலைமையினை தோற்றுவித்துள்ளது.


ஆனால், யார் அதிகாரபீடம் ஏறினாலும், தமிழருக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கே உணர்ந்திருக்கின்றார்கள் என்பதோடு தம் இனத்தின் இரத்தக்கறைபடிந்தவர்கள் நிற்கும் இத்தேர்தலில் "எவர் வந்தால் என்ன?!" என்ற எண்ணத்தோடு பெரும்பாலும் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகின்றார்கள். ஆனாலும், போடப்படும் தமிழர் வாக்குகள் அனைத்தும் மகிந்த மாத்தையாவை பழிதீர்க்கும் நோக்குடனேயே வாக்குப்பெட்டிகளில் நுழையும் என்பதும் உறுதி.


சர்வதேச நாடுகளும் தம் பங்கிற்கு தமது சுயநலன்களுக்கு ஏற்றவாறாக யார் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு தமது ஆதரவினை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காட்டிவருகின்றன. பெரும்பாலும், ஜனாதிபதித் தேர்தலின் பின் நாடாளுமன்றத் தேர்தலும் நடாத்தப்பட்டு, அதன்பின் தமிழருக்கான தீர்வு நாடகம் அரங்கேற்றப்படலாம். அதை மகிந்த சகோதரர்கள் அரங்கேற்றுவார்களா? அல்லது ரணில் - பொன்சேகா கூட்டணி அரங்கேற்றுமா என்பதனை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும். எவர் தீர்வை முன்வைத்தாலும் தீர்வு என்ன என்பது தொடர்பிலும் அதனை தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ளப்போவது யார்? என்பது தொடர்பிலும் ஈழத் தமிழ்மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.


இன்று, தமிழர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூட தமிழர்களின் மத்தியில் தனது பிரதிநிதித்துவத்தினை இழந்து நிற்கின்றது. தமது நிலையில்லாத முடிவுகளாலும், விலைபோகும் தன்மையினாலும் தமக்குரிய ஸ்தானத்தினை இழந்து, நம்பிக்கைத்தன்மையினை இழந்து சிங்களத்தினதும் இந்தியாவினதும் தாளத்துக்கு ஆடும் கூத்தாடிகள்போல் நடந்துகொள்வது உண்மையிலேயே கேவலமான ஒரு விடயம். இதற்குள்ளும் இலங்கையின் பாராளுமன்றத்தில் திரு.கஜேந்திரன் அவர்கள் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமிழீழத் தேசியம், தமிழரின் வரலாற்று உரிமை தொடர்பாக துணிச்சலாக தெரிவித்திருந்த கருத்துரைகள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டிய, வரவேற்கத்தக்க விடயந்தான்.


தமிழ் தேசியக் கூட்டமைப்புமேல் நமக்கிருக்கின்ற நம்பிக்கையை இழக்கின்ற நிலைமையை அவர்களே ஏற்படுத்திவருகின்றார்கள். தமிழர்களின் வாக்கு வலிமையினால் ஒன்றிணைந்த கூட்டமைப்பு... இன்று தமது சுயநலன்களுக்காக கூறுபட்டு குழறுபடிபண்ணி நிற்பதானது... வருந்தத்தக்கதும், கண்டிக்கத்தக்கதுமானதாகும். தமிழரின் தலைவிதியை, தன்மானத்தினை அடகுவைக்க....,விலைபேச இவர்கள் யார்??? என்ற கேள்வியுடன்... அவர்களுக்கான தீர்ப்பை தீர்மானிக்கப்போவதும் நம் தமிழ் மக்களே!


"தமிழர்களுக்கான தீர்வு" என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை,பூர்வீக நிலப்பரப்பு, கலாச்சார பாரம்பரிய விழுமியங்கள் என்பவற்றினை உறுதிப்படுத்துவதுடன் மிக முக்கியமாக, தம்மைத் தாமே ஆளும் உரிமையை அளிப்பதாக அமையவேண்டும். அதனைத் தவிர்த்து சில்லறைத்தனமான விடயங்களை அடக்கிய தீர்வு முற்றாக நிராகரிக்கப்படவேண்டியது. மீறி அதைத் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்களானால், காலப்போக்கில் சிங்கள ஆதிக்கத்தின் நிரந்தர அடிமைகளாக தமிழர்கள் ஆகவேண்டிய இழிநிலை ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகிவிடும்.


தற்பொழுது புலம்பெயர் நாடுகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை வலியுறுத்தி தமிழர்களின் ஒரே விருப்புத் தீர்வாக "தமிழீழம்" என்பதே அமையும் என்பதனை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த,தெரியப்படுத்த மேற்கொள்ளப்பட்டுவரும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் வரவேற்கப்படவேண்டியவை. வெறும் வாக்குப் பதிவுகளோடு இவை நின்றுவிடாமல், ஈழத் தமிழர்கள் தனித்து நாடு அமைத்து, தம்மைத்தாமே ஆளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு தமிழினத்துக்குள்ள வரலாற்று உரிமையை சர்வதேசத்திற்கு வலியுறுத்தி அவ்வுரிமையை வென்றெடுப்பதற்கு தொடர்ந்தும் பலவழிகளில் போராடும் வகையிலும் தொடரப்படவேண்டும்.


இத்தனை வருடங்களாய் போராடியதும், இவ்வளவு தியாகங்களை பண்ணியதும் சிங்கள வல்லாதிக்கம் திணிக்கும் மட்டமான தீர்வை ஏற்றுக்கொள்வதற்காக அல்ல... நமது தாய்மண்ணின், நமது தமிழினத்தின் விடுதலைக்காகவும் விடிவுக்காகவும் தான்! எம் இனத்தின் தலைவிதியை நாமேதான் தீர்மானிக்கவேண்டுமே தவிர, அதை தீர்மானிப்பது எதிரியாகவோ அல்லது ஈனத் துரோகிகளாகவோ, சுயநலமிக்க சர்வதேச சதிகார நாடுகளாகவோ இருக்கக்கூடாது. அடிமைப்பட்டுப் போவதற்காகவா... இத்தனை நாளும் போராடினோம்? இவ்வளவு இழப்புக்களையும் தாங்கிக்கொண்டோம்?


எனவே, ஈழத் தமிழர்களிற்கான ஒரே தீர்வாக "தமிழீழம்" என்ற தனிநாட்டுத் தீர்வு மட்டுமே அமைய முடியும் என்பதனை இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுவோம்! அவ்வாறில்லாமல் வேறேதும் "வெற்றுத் தீர்வு" தமிழர்கள்முன் வைக்கப்பட்டால், அதனை முற்றுமுழுதாக நிராகரித்து "தமிழீழம்" என்ற இலட்சியத்தினை அடையும்வரை போராட்டம் தொடரும் என்பதை அறிவிப்போம்!


"தமிழீழம்தான் எமது தீர்வு" என்ற ஆணித்தரமான கோரிக்கையுடன் உலகெங்கும் உள்ள தமிழர்கள் போராடத் தயாராகுங்கள்!

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

-பருத்தியன்-