பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

திங்கள், 6 ஏப்ரல், 2009

ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!!



ஐயோ அம்மா...! என்னை காப்பாத்துங்கோ...!!!
- ஒரு இனத்தின் அவலக்குரல்

யாரை நோக்கி இந்த அவலக்குரல்??? யாருக்குக் கேட்கும் இந்த அழுகுரல்???

மிகவும் ஆபத்தான நிலையில் இப்பொழுது வன்னி மக்கள் இருக்கின்றார்கள். "பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் ஒரு மரணப் பொறிக்குள் இரண்டரை இலட்சத்திற்கும் மேலான அப்பாவி மக்கள் சிக்கியிருக்கின்றார்கள். புதுக்குடியிருப்பு முழுவதும் தம்வசம் வந்துவிட்டதாகவும் பாதுகாப்பு வலயம் மட்டுமே இன்னும் எஞ்சியுள்ளதாகவும் சிங்கள இராணுவம் அறிவித்துள்ளதன் பின்னணியில், அவ்வப்பாவி மக்களையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு வலயம் மீது பெருமெடுப்பிலான தாக்குதலை நடத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. அப்பாதுகாப்பு வலயத்தினை ஐந்து முனைகளில் சிங்கள இராணுவம் சுற்றிவளைத்து ஒரே சமயத்தில் தாக்குதல் நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மக்கள் அனைவரும் தற்பொழுது இருக்கும் பகுதியான இந்த பாதுகாப்பு வலயத்துக்குள்தான் புலிகள் அனைவரும் இருக்கின்றார்கள் என்ற தோற்றப்பாட்டினை உருவாக்குவதற்கு சிங்கள அரசு முனைகின்றது. இதன் மூலம் தாம் நடத்தப்போகும் கொலைவெறித் தாக்குதல்களுக்கு காரணம் காட்டவும் எத்தனிக்கின்றது. அதில் எந்தளவுக்கு உண்மை இருக்கின்றது என்பதையும் தாண்டி, அத்தாக்குதல்களினால் அப்பாவி மக்களே மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதே உண்மை. இதுவரை நாளும் நடந்தேறிய கொடுமைகளைவிட இனிமேல் நடக்கப்போவது கொடுமையிலும் கொடுமையாகவே இருக்கப் போகின்றது.

உலகம் பூராவுமுள்ள தமிழ் உறவுகளே! ஏற்கனவே எவ்வளவோ அவலங்களிற்கு முகங்கொடுத்திருக்கும் உங்கள் உறவுகளைச் சுற்றி இப்பொழுது மிகப்பெரும் ஆபத்து சூழ்ந்திருக்கின்றது. இன்னும் ஒருசில மணித்தியாலங்களிலோ இன்னும் ஒருசில நாட்களிலோ அவர்கள் சின்னாபின்னமாக்கப் படலாம். சின்னஞ்சிறு பிள்ளைகளின் பிஞ்சுடல்கள் சிதறடிக்கப்படலாம்.உங்கள் உறவுகள் அழிவின் விளிம்பில் நிற்கின்றார்கள்.


யாராவது அதை தடுத்து நிறுத்த மாட்டார்களா என அச்சத்துடன் அந்தரிக்கும் அவர்களின் ஏக்கம் உங்களுக்கு புரியவில்லையா??? பசியோடு வாடி வதங்கிய சின்னஞ்சிறுசுகள் பயத்தோடு பரிதவிப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா??? உங்கள் இரத்த உறவுகளின் அவலக்குரல்களும், அபயக்குரல்களும், மன்றாட்டுகளும் உங்கள் செவிகளில் விழவில்லையா???

உறவுகளே! பொறுத்தது போதும் பொங்கியெழுங்கள்! உங்கள் உறவுகளை சிங்கள வெறியர்கள் கொடூரமாக கொன்று குவிக்கப் போகின்றார்கள். உங்கள் உயிரினும் மேலான உறவுகளின் இரத்த ஆறு ஓடுவதை தடுத்து நிறுத்த உங்களால்தான் முடியும்.காத்திருக்கக் காலம் இல்லை. நடக்கப்போகும் கொடூரத்தினை வெளிச்சத்துக்கு கொண்டுவாருங்கள். சர்வதேசத்தின் சந்நிதிக்கு கொண்டுவாருங்கள். மனிதாபிமானம் பற்றி உதட்டளவில் மட்டும் பேசிக்கொண்டு தமிழுறவுகளின் அவலங்களை கண்டும் காணாமல் மெளனமாய் இருக்கும் சர்வதேச ஜான்பவான்களின் மெளனத்தினைக் கலையுங்கள். இதுவரைகாலமும் தமிழுறவுகளின் அவலங்களை எடுத்துரைத்தும் கேளாத சர்வதேசத்திற்கு இப்பொழுது இடித்துரையுங்கள்! இப்பொழுதே புறப்படுங்கள்! தாமதிக்கத் தருணம் இல்லை. நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களின் தலையில் வெடிகள் இடியாய் விழும்.

இதுவரை செய்த உங்கள் போராட்டங்கள் எல்லாமே உங்கள் உறவுகளுக்காகத்தானே...!!! நீங்கள் இப்பொழுதும் அவர்களுக்காக , அவர்கள் அனைவரையும் பெரும் ஆபத்திலிலிருந்து காப்பாற்றுவதற்காக வீதிக்கு இறங்க வேண்டும். அதுவும் இப்போதே இறங்க வேண்டும். பொங்கியெழுந்து போராடுங்கள்! உங்கள் உறவுகளுக்கான உதவிக்குரல்களை உரக்க எழுப்புங்கள்! உறுதியோடு எழுப்புங்கள்!! தூங்கிக் கொண்டிருக்கும் சர்வதேசத்தினை தட்டியெழுப்பட்டும் உங்கள் உறவுகளுக்கான உரிமைக்குரல்கள்!!!
உங்களது போராட்டத்தின்போது முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை,
வன்னி மக்கள் தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பாரிய மனித அவல பேராபத்தினை சர்வதேசத்திற்கு எடுத்துரைப்பதாகவும், அதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுவதற்கான உடனடி நடவடிக்கையினை சர்வதேசம் மேற்கொள்ள வலியுறுத்துவதாகவும் உங்களது போராட்டம் அமைய வேண்டும்.
நீங்கள் வாழும் நாட்டின் சட்டதிட்டங்களை மீறாமல் அதற்கு அமைவாக,
எந்தளவுக்கு வீரியமாக உங்கள் போராட்டம் இருக்கமுடியுமோ, அந்தளவுக்கு வீரியத்துடனும், பேரெழுச்சியுடனும் உங்கள் போராட்டங்கள் முன்னேடுக்கப்படவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
"தமிழீழம்" ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதையும் இவ்விடத்தில் வலியுறுத்தல் நன்று.

பொங்கியெழும் உங்கள் போராட்டந்தான், உங்கள் உறவுகள் சின்னாபின்னமாகி சிதறிச் செத்துமடிவதைத் தடுக்கும். தட்டிக்கேளுங்கள் சர்வதேசத்தினை...உங்கள் சொந்தங்கள் தொடர்ந்தும் செத்து மடிவதற்கு சர்வதேசத்தின் மெளனமே முதற்காரணம். உங்கள் போராட்டம் உங்கள் சொந்தங்களின் வாழ்வுரிமைக்கானது. அநியாயமாக உங்கள் உறவுகளை கொன்றொழித்து இனப்படுகொலை செய்யும் சிங்கள வல்லாதிக்கத்தின் முகத்திரையை சர்வதேசத்தின் முன் கிழித்தெறியுங்கள்!

அவர்களின் அழுகுரல்கள் இந்த உலகத்தின் காதுகளுக்கு தானாக கேட்கப்போவதில்லை. நீங்கள் இடித்துரைக்கப்போகும் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உரிமைக்குரல்களுக்கு உலகத்தினை செவிசாய்க்க வையுங்கள். உங்களது கோரிக்கைகளுக்கு சர்வதேசம் செவிசாய்க்கும் வரைக்கும், இக்கணத்திலிருந்தே மிகவும் உத்வேகத்துடன் உறுதியுடன் தொடர்ந்து ஓயாமல் போராடுங்கள்!
உங்கள் சொந்தங்களை சாவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுங்கள்!!!

-பருத்தியன்-

7 கருத்துகள்:

பிளாட்டினம் சொன்னது…

புதிதாக பலம் சேர்க்க என்று என் எத்தனையோ நண்பர்கள் தென் இலங்கையில் இருந்து தவிக்கிறார்கள் நான் உட்பட... உங்கள் உயிர்கள் பாதுக்காக்கப் பட வேணும் என்று இதுவரை தட்டி கழித்து விட்டனர் எமது கோரிக்கையை... எங்கள் மாதிரி ஆக்களுக்கும் ஒரு வழி இருந்தால் சொல்லுங்களேன் நாமாகவே களத்தில் இறங்குவோம் - விடுதலைக்காக ஆகுதியாக நாங்களும் தயார் தான்...

பெயரில்லா சொன்னது…

நாம் அனைவரும் ஒன்று திரள்வோம்..

பெயரில்லா சொன்னது…

தமிழிஷ் இலும் இணையுங்கள்

-பருத்தியன்- சொன்னது…

உங்கள் ஆதங்கம் புரிகின்றது பிளாட்டினம்...
களங்கள் அமையும்... காத்திருங்கள்.
இப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருப்பதும் ஒரு போராட்டம்தான். தொடர்ந்து போராடுவோம்.
-பருத்தியன்-

-பருத்தியன்- சொன்னது…

நன்றி தூயா... தமிழிஷுடன் இணைத்துவிட்டேன்.
நாம் அனைவரும் ஒன்றுதிரளவேண்டியது காலத்தின் கடமை.
-பருத்தியன்-

கிருஷ்ணா சொன்னது…

//"தமிழீழம்" ஒன்றே தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதையும் இவ்விடத்தில் வலியுறுத்தல் நன்று//

சிலர் இதை மறந்துவிட்டார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

காலத்தின் தேவைக்கேற்ற கட்டுரை பருத்தியன். உங்களுடைய கட்டுரைகளைப் பல்வேறு இணையததளங்களிலும் காணமுடிகிறது. இது உங்களுடைய எழுத்துக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.தொடர்ந்து எழுதுங்கள்...

-பருத்தியன்- சொன்னது…

நன்றி அண்ணா! ஒரு தமிழனாய் என் கடமையை செய்ய ஆசைப்படுகின்றேன். அவர்கள் (தமிழ் இணையத்தளங்கள்) தரும் ஆதரவு என்னை இன்னும் எழுதத் தூண்டுவனவாக அமையும்.