இலங்கையில் தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல்களம் வன்முறைகள், வாக்குறுதிகள், குழறுபடியான அறிக்கைகள், சர்வதேச நாடுகளின் மறைமுக அழுத்தங்கள் என பலவாறான விடயங்களால் வெற்றி குறித்து தீர்மானத்துக்கு வரமுடியாத குழப்பநிலையை உருவாக்கியிருக்கின்றது.
இன்னும் சில நாட்களில் நடந்தேறப்போகும் தேர்தலில் வெற்றி யாருக்கு என தீர்மானிப்பதில் வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்குகளே பெருமளவு செல்வாக்கு செலுத்துகின்றன. அத்தோடு மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளும் இவ்விடயத்தில் அடங்கும்.
தமிழர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை பொன்சேகாவுக்கே கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம். பொன்சேகாதான் வெல்லவேண்டும் என்பதற்காக இல்லாமல் எப்படியாவது மகிந்தவை தோற்கடித்துவிட வேண்டுமென்ற காட்டமான எண்ணமாகவே பொன்சேகாவுக்கான இவர்களின் ஆதரவு அமையும் என்பதே உண்மை.
இது இவ்வாறிருக்க, தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்தாலும்... அதில் யார் வெற்றி பெற்றாலும்... அதன் பின் தமிழர்களின் பிரச்சனை தொடர்பான விடயங்கள் எவ்வாறு கையாளப்படும் என்பது குறித்து நாம் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். மகிந்த மீண்டும் ஜனாதிபதியானாலும், சரத்பொன்சேகா புதிதாக ஆட்சிபீடம் ஏறினாலும் அவர்களினதும் அவர்களின் பின்னாலுள்ள சர்வதேச சக்திகளினதும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின்படியே தமிழர் பிரச்சினை கையாளப்பட இருக்கின்றது. இது எந்தளவுக்கு தமிழருக்கு சார்பானதாகவும் நியாயமானதுமாகவும் அமையுமென்பது மிகவும் சந்தேகத்துக்குரியதே.
தமிழர்களின் பேரம்பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கமும், ஆயுதப் போராட்டமும் (தற்காலிகமாக) இல்லையென்று ஆனநிலையில் தமிழர்களுக்கான நியாயமான தீர்வை வழங்குவதற்கு சிங்கள வல்லாதிக்கம் இணங்கப் போவதில்லை. தனிநாட்டுக் கோரிக்கையுடன் போராடிய தமிழர்களுக்கு ஆகக்குறைந்தது தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறைமையிலான சுயாட்சி தீர்வைத்தன்னும் கொடுப்பதற்கு சிங்கள இனவாதம் உடன்படாது.
தமிழர்களின் வாக்குகளிலேயே தமது வெற்றி தங்கியுள்ளது என்று தெரிந்திருந்தும், தாம் ஜனாதிபதியானால் தமிழர்களுக்கு அவ்வாறான சமஷ்டி முறை சுயாட்சி தீர்வொன்றை அளிப்பதாக "பொய்க்கேனும்" ஒரு வாக்குறுதியை கொடுப்பதற்கு துணியவில்லையென்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம். சிங்கள தேசத்திடமிருந்து தமிழருக்கான நியாயமான தீர்வு எப்பொழுதுமே கிடைக்கப்போவதில்லை என்பதனை தமிழர்கள் கடந்தகால வரலாறுகளின் மூலம் நன்கு பட்டறிந்துள்ளார்கள். இருப்பினும், சர்வதேச ஆதரவுகளினைத் திரட்டி அதன்மூலம் தமக்கான நியாயமான தீர்வினை பெற்றுக் கொள்ளலாம் என்ற தளராத நம்பிக்கையுடன் தமிழினம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.
ஆனால், தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பின்னடைவை சந்தித்துள்ள இந்த கால இடைவெளியினை தகுந்த சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் திரைமறை வேலைகளில் சர்வதேசம் ஈடுபட ஆரம்பித்துள்ளது. சர்வதேசத்தினைப் பொறுத்தவரையில், தமது வல்லாதிக்க சுயநலன்களுக்கு ஏற்றவாறாக தமக்கு எப்பொழுதுமே சாதகமாக இருக்கக் கூடியவாறான ஒரு ஆட்சி இலங்கை தேசத்தில் அமைந்தால் போதுமானது என்ற சுயநல நோக்கத்துடனேயே செயற்படுகின்றது. தமிழர்களின் அபிலாசைகள், நியாயமான தீர்வு, சுதந்திரமான வாழ்க்கை என்பதெல்லாம் சர்வதேச நாடுகளினைப் பொறுத்தவரையில் இரண்டாம்பட்சம்தான். தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து இலங்கை அரசின்மீது தமது அழுத்தங்களினை பல்வேறு வழிகளில் பிரயோகிக்க ஆரம்பித்துள்ளது சர்வதேசம். அவை தமிழர்மீதான அக்கறையினால்தான் என்று நாம் நினைத்தோமானால், அது எமது அறிவீனம்தான்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைகளினைப் பொறுத்தவரையில் மகிந்தவை விட சரத் பொன்சேகா இலங்கை ஜனாதிபதியானால் தமக்கு சாதகமாக இருப்பார் என்று கருதுகின்றன. சரத் பொன்சேகா ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட விடயத்தில் கூட பல சர்வதேச நாடுகளின் மறைமுக தொடர்புகள் இருப்பதாகவே கருதப்படுகின்றது. மறுபக்கத்தில் மகிந்தவுக்கு பின்புலமாக சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஈரான் என இன்னொரு சர்வதேசக் கூட்டணி துணை நிற்கின்றது. இவ்வாறு தற்போதைய இலங்கை அரசியலில் சர்வதேச பின்னணி செயற்பாடுகள் தொடர்கின்றன.
தேர்தலின் பின் ஆட்சிபீடமேறும் ஜனாதிபதிக்கு பிரதான கடமையாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதென்பதே அமையப் போகின்றது.
ஆனால், ஜனாதிபதியே விரும்பினாலும் தமிழருக்கு நியாயமான தீர்வினை கொடுப்பதற்கு சிங்கள இனவாதிகள் இடங்கொடுக்கமாட்டார்கள். நிலைமை இவ்வாறிருக்க, தமிழர்களிற்கான தீர்வு என்ற பெயரில் உருப்படியில்லாத தீர்வொன்றினை முன்வைத்து அதன் மூலம் தமிழர்களினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் போராட்டங்களின் உத்வேகத்தினை குறைத்து காலப்போக்கில் விடுதலை உணர்வினையே இல்லாமற்செய்துவிடும் சாமர்த்தியத்தனமான திட்டமே வகுக்கப்பட்டிருக்கின்றது.தமிழர்களுக்கு இதைவிட சிறந்த தீர்வு வேறொன்றுமில்லை என்று பாராட்டுத் தெரிவித்து அதை அங்கீகரிப்பதற்கு சிங்களத்தின் பின்னால் நிற்கும் சர்வதேச நாடுகளும் தயாராகிவருகின்றன. பெரும் இழப்புக்களைச் சந்தித்து நொடிந்து போய் சுதந்திரத்தினை,உரிமைகளை இழந்து இன்றும் அகதிகளாய் அலையும் அவலத்துடன் அல்லாடும் ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தினை கூட்டுச்சேர்ந்து அழித்தது மட்டுமல்லாமல் இப்போது அவர்களின் சுயநலன்களுக்காக தமிழர் தீர்வு விடயத்திலும் பெரும் வரலாற்றுத் தவறினை இழைப்பதற்கு சர்வதேசம் தயாராகி நிற்பது நியாயமானதா? நீதியானதா??
தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை புரிந்துகொண்டு அவர்களுக்கான தீர்வினை முன்வைப்பதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அதையும் மீறி தமிழர்களை ஏமாற்றி அவர்களின் போராட்டத்திற்கு முடிவுகட்டுவதற்காக சுயநலப்போக்குடன் சிங்களத்துடன் கைகோர்க்குமானால், அது சர்வதேசம் இழைக்கும் வரலாற்றுத் தவறாகவே அமையும் என்பதோடு மீண்டும் ஆயுதவழிப் போராட்டத்தின்மேல் தமிழர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வழிவகுப்பதாயும் அமைந்துவிடும்.
சர்வதேசத்தின் நீதியினை எதிர்பார்த்திருக்கும் தமிழர்களுக்கு சர்வதேசமும் சிங்களமும் சேர்ந்து இவ்வாறான துரோகத்தினை இழைப்பதற்கு உலகம் பூராவுமுள்ள உலகத்தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது. புலம்பெயர் தமிழர்களோடு தமிழகத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என உலகம் பூராவும் பரவி வாழும் அனைத்துத் தமிழர்களும் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து தமிழருக்கான நீதிக்காக குரல் கொடுக்கவேண்டிய தருணமிது. ஜாதி, மத, கட்சி என இன்னபிற வேற்றுமைகளைக் களைந்து ஓரணியில் அணிதிரள்வோம்!
"
நாம் தமிழர்" என்ற ஒரே கோட்பாட்டுடன் அனைத்துத் தமிழரும் ஒன்றிணைந்து குரல்கொடுப்போமானால் இந்த உலகம் அதற்கு பணிந்துதான் ஆக வேண்டும். அந்த நிலையை உருவாக்குவோம்! தமிழீழம் தன்னை எமதாக்குவோம்!! தமிழருக்கான நீதியை நிலை நாட்டுவோம்!!!தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!
"
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"-பருத்தியன்-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக