பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

ஞாயிறு, 22 மார்ச், 2009

கையில் ஏந்துவோம் புலிக்கொடி! அதுவே எமது வெற்றிக்கொடி!!



புலிக்கொடியென்பது தமிழர்களின் வரலாற்றுக்கால சோழ மன்னர்களிற்குரிய , அவர்களின் வீர வரலாற்றை பறைசாற்றிய கொடியென்பது சரித்திரம். அந்தவகையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கான கொடியாக, சின்னமாக புலிக்கொடியை தேர்ந்தெடுத்திருந்தனர். தற்போதும் தமிழரின் வீரத்தினை இப்புலிக்கொடியே பறைசாற்றி வருகின்றது.
அண்மையில் அனைத்துலக நாடுகளில் நடந்த தமிழர் எழுச்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளைக் குறிக்கும் புலிக்கொடி பாவிக்கப்பட்டிருந்ததானது பல மட்டங்களில் பலவிதமாக பேசப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மற்றும் ஆதரவாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்களை உற்றுநோக்கும்போது, தமிழீழ தேசியக்கொடியான புலிக்கொடி பாவிக்கப்பட்ட விடயம் அனைவர் மத்தியிலும் ஏதோவொரு தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது என்பது தெளிவாகப் புலப்படும்.
குறிப்பாக இலங்கை அரசு பாய்ந்தடித்துக்கொண்டு தனது எதிர்ப்பை வெளியிட்டிருப்பதென்பது அதன் விளைவுகள் மிக அழுத்தமாக இருக்கும் என்பதனையே கோடிட்டுக் காட்டுகிறது.
இத்தாக்கங்களின் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையும் அதன் பலாபலன்கள்,விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது பற்றி பார்ப்போமானால்...
எழுச்சிகள், பேரணிகளில் கலந்துகொள்ளும் மக்கள் தமிழீழ தேசியக்கொடியை தாங்கி வருவதிலிருந்து சர்வதேசத்திற்கு அழுத்தம் திருத்தமாக சில விடயங்களை சொல்லவருகிறார்கள்.
தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழரும் வேறுவேறில்லை;
விடுதலைப்புலிகளே தமிழர்களுக்கான ஏக பிரதிநிதிகள்,
புலிகளே தமிழரது காவலர்கள்;
தமிழர்கள் அனைவரும்
தமிழீழத் தீர்வினையே எதிர்பார்க்கின்றார்கள்,
தமிழீழத் தீர்வே தமிழரின் நிரந்தரத் தீர்வாக அமையும்;

என்பவற்றை ஆணித்தரமாக உலகத்திற்குச் சொல்லிவைக்க முற்பட்டிருக்கிறார்கள்... தமிழீழ தேசியக்கொடியின் கீழ் ஓரணியாகத் திரண்டிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கிறது. ஏனெனில், சர்வதேசத்தின் பார்வை இலங்கையை நோக்கித் திரும்பியிருக்கும் நிலையில்,
சர்வதேசம் தமிழர் விடயத்தில் ஏதாவது தீர்வினை முன்வைக்க முயற்சிக்கும்.அத்தீர்வானது தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் அளவுக்கு அமையுமா? என்பது சந்தேகமே. சர்வதேசமானது இலங்கையரசையும் அனுசரித்தே நடக்க முனையும். அப்படிப்பட்ட தீர்வானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அமையாது. தமிழ்மக்களின் முப்பது வருடகாலப் போராட்டத்திற்கும் அவர்களின் தியாகங்களுக்கும் ஈடாக அது இருக்குமா என்பது கேள்விக்குறியே. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களின் மரணங்களுக்கும் , பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்களுக்கும், இந்த நிமிடம்வரை வன்னி மண்ணில் சிந்தப்பட்டுக்கொண்டிருக்கும் இரத்தத்திற்கும் பின்னால் "தமிழீழம்" எனும் கனவே இருந்தது...இருக்கின்றது. இதையும் மீறி சர்வதேசம் "தீர்வில்லாத தீர்வு" ஒன்றினை தமிழர்கள் மேல் திணிக்க முற்படலாம்.ஆனால் அப்படிப்பட்ட ஒரு தீர்வினை தாங்கள் ஏற்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழீழத் தேசியக்கொடியை ஏந்தியதன் மூலம் சர்வதேசத்திற்கு அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார்கள் உலகத்தமிழர்கள்.
இதனை சிறிலங்கா அரசு நன்கறியும். இது இவ்வாறே தொடர்ந்தால் , உலக நாடுகளின் செயற்பாடுகள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மாற்றமடையும் என அச்சங்கொள்ளத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாகவே இது தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன , "அனைத்துலக நாடுகளில் நடைபெற்று வரும் தமிழ் மக்களின் போராட்டங்களில் தமிழீழத் தேசியக் கொடி தாங்கிச் செல்லப்படுவது தொடர்பாக அரசாங்கம் தனது அதிருப்தியை எல்லா நாடுகளிடமும் அந்த அந்த நாட்டு தூதரகங்களின் ஊடாக தெரிவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.இது தொடர்பான பேச்சுக்களை அந்த அந்த நாடுகளுடன் மேற்கொள்வதற்கான உத்தரவுகள் தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.கனடா, பெல்ஜியம் மற்றும் சுவிஸ் நாடுகளில் தமிழீழத் தேசியக் கொடி வெளிப்படையாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது தொடருமானால் அவர்களுக்கு மேலும் ஆதரவுகள் ஏற்படலாம்; எனவே நாம் இதனை விரைவில் தடுக்க வேண்டும்" என அறிக்கை வெளியிட்டிருந்தார். அத்துடன், மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் அறிக்கையில் , "விடுதலைப் புலிகளுக்கு சார்பாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நாடுகளுக்கு இலங்கை கடும் ஆட்சேபனையைத் தெரிவிக்க இருப்பதாகவும், இந்த நாடுகள் சிலவற்றில் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். புலிகளின் கொடிகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் பயன்படுத்த இந்த நாடுகள் அனுமதித்திருப்பதையிட்டு வியப்படைகிறோம். எமக்கு எதிராக பகிரங்கமாக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.இந்த நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதென சம்பந்தப்பட்ட நாடுகளிடம் ஆட்சேபனை தெரிவிக்குமாறு இலங்கைத் தூதரகங்களிடம் கேட்கப்பட்டுள்ளது" எனவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால் கனடிய அரசு , "தமது நாட்டு சட்டதிட்டப்படி அது சட்டரீதியானதே" என கூறியிருப்பது சிறிலங்கா அரசின் சதிச்செயலுக்கு விழுந்த முதல் அடியாக மட்டுமன்றி தமிழர்பால் அவர்களின் கடைக்கண் பார்வை திரும்பியுள்ளதாகவும் கொள்ளலாம். தமிழீழ தேசியக்கொடி விடயத்திலும் அதன் மூலம் தமிழ்மக்கள் சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க விரும்பும் தமது நிலைப்பாடு குறித்தும் சர்வதேச நாடுகள் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
உலகத்தமிழரின் கைகளில் தமிழீழத்துக்கான பெருங்கடமை ஒன்று கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அனைத்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்தும் இயன்றவரையான பங்களிப்புக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. புலம்பெயர் தேசத்திலேயே பிறந்து வளர்ந்துவரும் இளம் சமுதாயமே இன்று தம் தாய் நாட்டின் தேவையறிந்து தமிழீழ எழுச்சி நிகழ்வுகளில் முன் நின்று செயலாற்றுவது மிகவும் வரவேற்கத்தக்கது. அது இன்னும் இன்னும் வீரியம்பெற்று தமிழீழ தேசத்தின் விடிவுவரை தொடரவேண்டுமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். அவர்களின் கரங்களில் அசையும் கொடிகள் முழு உலகத்தின் கவனத்தையும் அதன்பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.உலகம் பூராவும் உள்ள தமிழர்கள் தங்கள் கைகளில் ஏந்தும் தமிழீழ தேசியக்கொடி நாளை சரித்திரம் படைக்கும். தமிழீழம் தன்னில் நெடிதுயர்ந்து பறக்கும்.
வெற்றிக்கொடி கையில் எடு!!!
வெல்வோம் என்று சொல்லி எழு!!!
-பருத்தியன்-

4 கருத்துகள்:

தமிழ் மதுரம் சொன்னது…

இது என்ன புது ஆள் ஒன்று வெளிக்கிட்டிருக்கிறார்? அப்ப இனிச் சபேர்களும் விதுரர்களும், பாவம்??? ஆவையளின்ரை ஆய்வுகளுக்கும் ஆப்புத் தான்??? தொடருங்கோ??

வாழ்த்துக்கள் பருத்தியரே....


ஏன் பந்தி பிரித்து எழுதக் கூடாதோ??

-பருத்தியன்- சொன்னது…

நன்றி கமல்.
இது பந்தி பிரித்துத்தான் எழுதப்பட்டிருந்தது. இணைக்கும்போது தவறு நடந்திருக்கிறது. அடுத்த தடவை கவனத்தில் கொள்கின்றேன்.

அவரவர்கள் தங்கள் தங்கள் பாணியில் எழுதுகிறார்கள். அவர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

-பருத்தியன்-

தமிழ் மதுரம் சொன்னது…

பருத்தியரே..! அவையவை எழுதும் போது உசுப்பேத்தலில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அது மட்டுமின்றி புலிகளின் தாக்குதல்களுக்கு தாங்கள் திட்டமிடுபவர்கள் போலப் புலத்தில் இருந்து ஆய்வின் மூலம் முழக்கமிடுகிறார்கள்...


உங்களது ஆய்வுப் பாணி சற்று வித்தியாசமானது.. மக்களிடத்தில் மாற்றங்களை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற கோணத்தில் நீங்கள் உங்கள் எழுத்துக்களை வலுப்படுத்துகிறீர்கள்..

அதனைத் தான் நான் சொன்னேன். உங்களுக்கு நேரமிருந்தால் இதனை ஒரு தடவை படித்துப் பாருங்களேன்???

http://melbkamal.blogspot.com/2008/12/blog-post_21.html

-பருத்தியன்- சொன்னது…

http://melbkamal.blogspot.com/2008/12/blog-post_21.html
[புலம் பெயர் தமிழர்களும் புலுடாப் பார்ட்டிகளும்!]
படித்துப் பார்த்தேன். சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருந்ததற்குள் பல முக்கியமான விடயங்களும் அடங்கியிருந்தன.நாசூக்காக சொல்லப்பட்ட சில ரசிக்க வைக்கின்றன. உங்கள் பாணியும் மிக நன்றாகவே இருக்கிறது கமல். தொடரட்டும்.வாழ்த்துக்கள்.
உங்கள் நடுநிலைமையான விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.