பருத்தியனின் வலைப்பதிவு உங்களை அன்புடன் வரவேற்கின்றது

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

மற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம் நமக்குத் தேவையில்லை....!தமிழ் மக்கள் அனைவரும் தற்போது பேரெழுச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் மனதில் சில தடுமாற்றங்களும் குழப்பங்களும் உருவாகியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. வன்னிக் களமுனை தொடர்பாக வந்த செய்திகளும், சிங்கள அரசின் மிகைப்படுத்தப்பட்ட வெற்றிப் பிரச்சாரங்களும் வன்னி மக்களின் பேரவலங்களும் ஒன்றுசேர்ந்தே இத்தகைய தடுமாற்றங்களை பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது. இவ்வகையான சலனங்கள் உருவாகுவது யதார்த்தமானது என்றாலும், தமிழர்தம் போராட்டத்தின் மிக முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கின்ற இன்றைய வேளையில் இவற்றிலிருந்து விடுபட்டு தெளிவு பெறுவது மிக மிக அவசியமானது.

புலிகள் தங்களின் போராட்டகால வரலாற்றில், இப்பொழுது பின்வாங்கிச் சென்றுள்ளதைப் போன்று இதுவரைகாலமும் பின்வாங்கிச் சென்றதில்லை. புலிகள் தற்பொழுது மிகச்சிறிய நிலப்பரப்புக்குள்ளேயே தங்களை நிலைப்படுத்தியிருக்கின்றார்கள்.
அத்துடன் சிறிலங்கா அரசு செய்து வரும் பொய்ப்பிரச்சாரங்களுக்கு புலிகளின் இவ்வாறான "பின் நகர்வு நடவடிக்கை" நல்லதொரு வாய்ப்பாகப் போய்விட்டது. இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி சிங்கள மக்களையும் சர்வதேசத்தினையும் இதுவரை ஏமாற்றி வந்த சிங்கள அரசு இப்பொழுது தமிழ் மக்களையும் ஏமாற்ற முற்பட்டிருக்கின்றது.

கடந்த சில நாட்களாக வன்னிக்களமுனை தொடர்பாக சிங்கள அரசினால் வெளியிடப்பட்டுவரும்
தகவல்கள் தமிழ்மக்களை தடுமாற்றமடைய வைப்பனவாகவே இருக்கின்றன. புலிகள் இன்னும் சில நாட்களில் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று கங்கணங்கட்டிக் கூறுகின்றது அரசு. அண்மையில் புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்த சண்டைகளில் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரை தாங்கள் கொன்றுவிட்டதாகவும், புலிகள் தற்பொழுது, பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட மிகக்குறுகிய பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டு விட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் புலிகளிடம் எஞ்சியிருக்கின்ற பகுதியையும் தாங்கள் பிடித்து விடுவோம் , அதற்காக ஐந்து முனைகளிலிருந்து ஒரேசமயத்தில் முன்னேறி அதிரடியாக அதை கைப்பற்ற இருப்பதாகவும் சிங்கள அரசு அறிக்கை விட்டிருந்தது.இவை அனைத்தும் பெரும்பாலான தமிழ்மக்கள் மத்தியில் கலக்கத்தினை உண்டுபண்ணியிருக்கின்றது. புலிகள் அழிந்து விடுவார்கள்... இனிமேல் தமிழீழம் என்பது கனவாகவே போய்விடும் என்று கலங்க ஆரம்பித்துவிட்டார்கள். சாதாரண கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்க்ளுக்கு இவை அதிர்ச்சி தரக்கூடிய செய்திகள்தான்.ஆனால் இவற்றினை முழுமையாக நம்புவது மிகப் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இப்பொழுது சிங்கள அரசுக்கு மிகவும் நெருக்கடியைக் கொடுத்துக்கொண்டிருப்பது சர்வதேச நாடுகளெங்கும் வாழும் தமிழர்கள் யாவரும் முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தான். முன்னொருபோதும் இல்லாதவகையில் புலம்பெயர் தமிழ்மக்கள் புலிகளை பிரதிநிதித்துவப்படுத்தத் தொடங்கியிருந்தனர். புலிக்கொடிகளை தம் கைகளில் ஏந்தியதன் மூலம் புலிகளே தமிழர்களது பிரதிநிதிகள், காவலர்கள் என உலகுக்கு வெளிப்படையாகவே வெளிப்படுத்தினர். இவை தொடர்ந்தால் சர்வதேச மட்டத்தில் புலிகளின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என உணர்ந்த சிங்கள அரசு இப்போராட்டங்களை எவ்வாறாகினும் தடுக்க நினைத்தது. ஆனால் அது இலகுவான காரியமாக இருக்கவில்லை. இப்பொழுது உருவாகியுள்ள களநிலை இறுக்கத்தினை தமது வெற்றியாக அறிவித்து அதன் மூலம் தமிழ்மக்களின் உளவுரணையும் புலிகள் மீதுள்ள அசையாத நம்பிக்கையையும் சீர்குலைப்பதே சிங்கள அரசின் முதல் நோக்கம். மக்களின் மனதில் தடுமாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் போராட்டங்களையும் மட்டுப்படுத்தலாம் என நினைத்தது சிறிலங்கா அரசு.
இவ்வாறான சிறிலங்கா அரசின் சதித்திட்டங்களின் பின்னணியில் செயற்பட்டுகொண்டிருப்பது இந்தியாவின் "றோ" அமைப்பு தான். சிங்கள அரசின் யுத்தத்திற்கு நேரடியாகவே உதவிகளைச் செய்து வரும் இந்தியா, தமிழர்கள் மீது மறைமுகமாக உளவியல் யுத்தமொன்றினை மேற்கொள்வதற்கு தனது "றோ" அமைப்பினை வைத்து திட்டங்களை வகுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இந்திய இராணுவம் இப்போது வன்னிக்களமுனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இறுதியாக, புதுக்குடியிருப்புப் பகுதியில் போராளிகள் மீது சர்வதேச போர் விதிமுறைகளுக்கு மாறாக பிரயோகிக்கப்பட்டிருந்த விஷவாயுத் தாக்குதல் கூட இந்திய இராணுவத்தின் நேரடி மேற்பார்வையின்கீழ்தான் நடந்தேறியுள்ளது எனத் தெரிகின்றது. பாதிக்குமேல் ஆளணி வளத்தினை இழந்திருந்த சிறிலங்கா இராணுவத்தினை தனது ஆளணி ஆயுத உதவிகளைக் கொடுத்து ஈழத்தமிழினத்திற்கு ஈனத்தனமான துரோகமிழைத்து வருகின்றது காந்தி தேசம். பழிதீர்க்க நினைக்கும் காந்திதேச காங்கிரஸிற்கு தமிழ் மக்களின் கண்ணீரும் காலமும் கட்டாயம் பதில் கொடுக்கும்.

இவ்விடத்தில், வன்னிமக்களின் நிலை மிகவும் ஆபத்தானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில், இராணுவத்தின் அடுத்த இலக்காக இருப்பது இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் செறிவாக இருக்கும் பாதுகாப்பு வலயம் தான். இதன்மேலும் செறிவான தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சம் இப்பொழுது தோன்றியுள்ளது. அவ்வாறு நடந்தால், மிகப்பெரும் மனித பேரவலத்தினை ஈழத்தமிழினம் எதிர்நோக்க வேண்டிவரும். மடிந்தாலும் தங்கள் மண்ணில் புலிகளுடனேயே மடிவோம் என்ற முடிவில்தான் வன்னி மக்கள் இருக்கின்றார்கள்.... இன்னும் தன்மானத்துடன்.

கள இறுக்கத்தினை புலிகளின் தோல்வி என வர்ணித்து தமிழ் மக்களின் மனதில் குழப்பத்தினை ஏற்படுத்தி அவர்கள் சோர்ந்து போவர்கள் என பார்த்துக் கொண்டிருந்த சிங்கள மற்றும் இந்திய அரசிற்கு பெருமதிர்ச்சி கொடுத்திருக்கின்றார்கள் ...புலம்பெயர் தமிழ் மக்கள். வன்னி மக்களின் ஆபத்தான அவல நிலையைக் கண்டு வீறிட்டு பொங்கியெழுந்தது தமிழினம்.இம்முறை போராட்டம் ஓயாத அலைகளாய் ஓங்கி அடிக்கத் தொடங்கியிருக்கின்றது. புதிய பரிமாணம் பெற்றன புலம்பெயர் தமிழரின் போராட்டங்கள். வீதி மறியல்,சாகும்வரை உண்ணாவிரதம் என மாற்றம் பெற்று அனைத்து மக்களினதும் ஒன்றுதிரண்ட உணர்வெழுச்சியுடன் பொங்கி பிரவாகிக்கின்றது புலம்பெயர் தேசமெங்கும். இளையோர் அணி முன்னின்று வழிநடத்த ஒன்று திரண்ட தமிழர் சர்வதேச சமூகத்தினை நோக்கி தமிழர் தம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.. ஈழத் தமிழரின் நியாயமான கோரிக்கைகள் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என்ற நிலையில் தொடருகின்றது போராட்டம்.

ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் தன்னிகரற்ற தலைவரும் அவரின் தலைமையிலான தமிழர் படையான புலிகளும் யாருக்கும் அடிபணியாத தீரம் நிறைந்தவர்கள். விலை போகாதவர்கள். தம் மக்களுக்காக உயிரையே துச்சமென மதிக்கும் சிந்தையுடைய தியாக சீலர்கள். அவர்களின் முன் சிங்களப் படையென்ன...? எந்தப் படை வந்தாலும் சிதறிச் சின்னாபின்னமாகிப் போகும். அதில் எந்த சந்தேகமும் ஈழத்தமிழராய் உள்ள எவருக்கும் வரக்கூடாது.புலிகளின் தளபதிகள் சிலர் களத்தில் கொல்லப்பட்டதாக சிங்கள அரசால் வெளியிடப்பட்ட தகவல்கள் எந்தளவுக்கு உண்மையானவை என்று தெரியவில்லை. அது உண்மையாக இருக்கலாம். இல்லாமல் விடலாம். ஆனால் ஒரு உண்மையை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.சிங்கள இராணுவத்தளபதி செத்தால் அந்த இடத்திற்கு அவரைப்போல் வேறொருவர் வருவதற்கு இன்னொருவரை உருவாக்கி வைத்திருக்கமாட்டார். ஆனால் புலிகளின் ஒரு தளபதி தன்னைவிட திறமையாக ஆயிரமாயிரம் போராளிகளை தனக்குப் பின்னால் உருவாக்கியிருப்பார்கள்.எவ்வகையான இழப்புக்களையும் தாண்டி தீரமுடன் வெல்லும் ஆற்றல் பெற்றது தமிழரின் புலிப்படை.புலிகளை யாராலும் அழிக்க முடியாது. உணர்வுள்ள கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும்வரைக்கும் புலியாய் இருந்து போராடுவான்.

தமிழ்மக்களே ! உங்கள் அனைவரினதும் கைகளில் மிக முக்கியமான வரலாற்றுக் கடமை கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதை நிறைவேற்ற வேண்டிய தருணம் இதுதான். உங்கள் உறவுகளை அழிவிலிருந்து காப்பாற்றவும் உங்கள் தமிழீழ தேசம் விடிவுபெறவும் நீங்கள் ஒரு தன்மானமுள்ள தமிழனாய் ஆற்றவேண்டிய கடமையை நிறைவாகச் செய்யுங்கள். எந்த நிலையிலும் மனம் தளராதீர்கள்! உறுதியோடு போராடுங்கள்! அசையாத நெஞ்சுறுதியோடு களத்தில் நிற்கும் உங்கள் தலைவன் கரங்களை பலப்படுத்துங்கள்! தீர்க்கதரிசனமான அவரின் காய்நகர்த்தல்களுக்கு பெருவெற்றியைத் தேடிக்கொடுங்கள்!

புலம்பெயர் உறவுகளே!! உங்கள் தேசத்தின் விடிவு இப்பொழுது உங்கள் கைகளில். உங்களின் போராட்டங்கள் யுத்தகளத்தினை விட வலிமை வாய்ந்தவை. களநிலை மாற்றங்களைப் போலல்லாது உங்கள் போராட்டங்கள் நேரடியான விளைவுகளை ஏற்படுத்தும். உலகவரலாற்றில் அனைத்து விடுதலைப் போராட்டங்களும் மக்களின் பேரெழுச்சியோடுதான் வெல்லப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான ஓயாத பேரெழுச்சிக்காகத்தான் தமிழீழ தேசம் இவ்வளவு நாளும் காத்திருந்தது.எனவே... களமறிந்து; காலமறிந்து
தன்னலம் விட்டு தன்மானத்தோடு தரணியெங்கும் சேருங்கள்!
சுயநலம் விட்டு சுய உரிமைக்காய் சர்வதேசமெங்கும் ஒலிக்கட்டும் உங்கள் குரல்.
மற்றவரின் தியாகங்களுக்குள் குளிர்காயும் கேவலம் நமக்குத் தேவையில்லை. எமது எதிர்கால சந்ததி நம்மை நாளை கேள்வி கேட்கும்போது , அதற்கு நெஞ்சை நிமிர்த்தி பதில்சொல்ல , நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் ஏதாவது செய்தாக வேண்டும்.
எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்கு சர்வதேசம் உடன்படும்வரை தளராமல், சிதறாமல், ஓயாமல் தொடர்ந்து போராடுவோம்!

-பருத்தியன்-

4 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

//புலம்பெயர் உறவுகளே!! களநிலை மாற்றங்களைப் போலல்லாது உங்கள் போராட்டங்கள் நேரடியான விளைவுகளை ஏற்படுத்தும்//

ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. எல்லா நாடுகளிலுமுள்ள தமி்ழ் இளையோர் அந்தந்த நாட்டின் தேசியமொழிகளில் கேட்கும் ஆவேசமான கேள்விகள் இன்னும் நம்பிக்கையை வளர்க்கின்றன..

பிளாட்டினம் சொன்னது…

ரொம்ப திறமையான அலசல் அண்ணா....
நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை பிறக்கும்...

[[[ பருத்தியன் ]]] சொன்னது…

கிருஷ்ணா அண்ணா... இப்பொழுது இளையோர் தலைமையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அவர்களின் வேகத்திற்கேற்ப விரைவாகவே சென்றடைய வேண்டியவர்களை சென்றடைவதை அவதானிக்க முடிகின்றது.
அதனாலான, மாற்றங்களும் விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

[[[ பருத்தியன் ]]] சொன்னது…

பிளாட்டினம் !
உறுதியாக நம்புவோம். நிச்சயம் தமிழீழம் என்றொரு தனிநாடு பிறக்கும்.அதன் புகழ் தரணி எங்கும் சிறக்கும்.