தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு ...அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. "இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.
ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச்செம்மல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.
அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டுமிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்... வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்... மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் "காந்தியம்" என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம். அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், இராஜீவ்காந்தி படுகொலை... இந்தியத் தேசியம்... பிராந்திய நலன்... என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???
அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டுமிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்... வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்... மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் "காந்தியம்" என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம். அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், இராஜீவ்காந்தி படுகொலை... இந்தியத் தேசியம்... பிராந்திய நலன்... என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???
தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு எப்போதுமே ஆதரிக்கப்போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இது உண்மையென்பதைத்தான் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் விடுத்த அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம்மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம்.
இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது. இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம், தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.
சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்துநிற்கும் இந்தியா,சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின. அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.
புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது. ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ; அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும். இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.
ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது. மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம். அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். "மக்கள் புரட்சி" என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்...ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம்.
நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவுகாலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச்சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம். புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம். எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம்.
இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா??? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்... நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.
"மக்கள் "புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். "எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை" என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக சீலன் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை நிறைவேற்றுவோம்! வென்று நம் தேசத்தில் கொடியேற்றுவோம்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
- பருத்தியன் -
- பருத்தியன் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக